×

மக்களிடம் செல்; மக்களோடு வாழ்; மக்களுக்காக வாழ் என்பதுதான் அண்ணா, கலைஞர் காட்டிய பாதை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் மற்றும் 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்,”திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி, முதல்வரின் முகவரி, களஆய்வில் முதலமைச்சர் இப்படி எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் திட்டமாக அமைந்துள்ளன. திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான திட்டம்.

மக்களிடம் செல்; மக்களோடு வாழ்; மக்களுக்காக வாழ் என்பதுதான் அண்ணா, கலைஞர் காட்டிய பாதை. நன்மைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்போம். ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். ஆட்சியில் உள்ளபோது மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம். அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில் சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது தெரிய வந்தது. சுணக்கத்தை முழுமையாக போக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. மக்கள் சிரமங்களை போக்கி, அவர்களுக்கு உதவவே மக்களுடன் முதல்வர் திட்டம் திமுக அரசால் தொடங்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தால், தேவையற்ற தாமதத்தை தவிர்த்தோம்; அவசியமற்ற கேள்விகளை குறைத்தோம். மக்களுடன் முதல்வர் திட்டம் என் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.வருவாய்த்துறையில் 42962 பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் முதல்வர் திட்டத்தின்கீழ் முப்பதே நாட்களில் 3.5 லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாணை முகமைகள் மூலம் 27858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களிடம் செல்; மக்களோடு வாழ்; மக்களுக்காக வாழ் என்பதுதான் அண்ணா, கலைஞர் காட்டிய பாதை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Anna ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,PTI ,Chennai Kalaivanar Arena ,K. ,Stalin ,Dimuka ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...